ரவுடி கருப்பு Pt web
தமிழ்நாடு

சென்னை | காவலர்கள் மீது தாக்குதல்.. ரவுடி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு!!

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரவுடி கருப்பு மற்றும் அரிவாள் வெட்டில் காயமடைந்த தலைமைக் காவலர் விஜயகுமார் இருவரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

PT WEB

திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு என்ற தமிழ் அழகு. இவர் காவல்துறையின் ‘ஏ’ (A) கேட்டகிரி பட்டியலில் உள்ள ரவுடி ஆவார். இவர் மீது கொலை வழக்குகள் இரண்டு உட்பட மொத்தம் 19 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொதுமக்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு பின்புறம் உள்ள காலி மைதானத்தில், ரவுடி கருப்பு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக திருமுடிவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். அப்போது, ரவுடி கருப்பு மற்றும் ஓட்டேரி பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்கின்ற சூர்யா இருவரும் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

போலீசாரைக் கண்டதும், தான் தயாரித்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் மீது வீச முயற்சி செய்துள்ளார் ரவுடி கருப்பு என்கிற தமிழழகு மேலும் சுற்றி வளைக்க முயன்ற போது தலைமை காவலர் விஜயகுமாரை வலது முழங்கையில் வெட்டி விட்டு தப்ப முயன்ற போது சுதாரித்துக் கொண்ட ஆய்வாளர் ரௌடியின் வலது கணுக்காலில் சுட்டு பிடித்துள்ளார். ரவுடியை 108 ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

காயம் பட்ட தலைமை காவலர் மருத்துவமனைக்கு சென்று வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.இருவரிடமும் வெடிகுண்டு தயாரிக்கும் உப பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரவுடிகள் இருவரும் நாட்டு வெடி குண்டு தாயர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இருவரிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கைதான சூரியா பிரபல ரவுடி ஓட்டேரி சிலம்புவின் மச்சான் என தெரியவந்துள்ளது.