தமிழ்நாடு

மதுரை ஆதீனத்துக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - மதுரை காவல் ஆணையரிடம் மனு

Veeramani

மதுரை ஆதீனத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி வழக்கறிஞர்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் மதுரை மாநகர் காவல் துறை ஆணையாளரிடம் மனு அளித்தனர்.

மதுரை ஆதீனமடத்தில் 293வது ஆதீனமாக இருக்கும் குருமகா சன்னிதானத்தின் உயிருக்கு தற்பொழுது அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் மதுரை ஆதீனத்திற்க்கும்,மதுரை ஆதீனமடத்திற்க்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் பொதுநல வழக்கறிஞர்கள் மற்றும் இந்துமக்கள்கட்சி சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.



மதுரை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம் பல்லக்கு தூக்குவது தொடர்பாக தமிழக அரசின் தடைக்கு எதிராக பேசியதால் , கஞ்சனூர் கோவிலில் நுழைவதற்கு ஆளும் கட்சியினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இது தொடர்பாக தேவைப்பட்டால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிடுவோம் என நேற்று மதுரை ஆதீனம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையில் மதுரை ஆதீனத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.



இந்து விரோத சக்திகளால் மதுரை ஆதீனம் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் அவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.