தமிழ்நாடு

சென்னை வந்தார் பிரதமர் மோடி - அடையாறு ஐ.என்.எஸ் தளத்தில் வரவேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Sinekadhara

பிரதமர் மோடி ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். பிரதமர் வருகையையொட்டி நேப்பியர் பாலத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளின் அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சி முடிந்ததும், சென்னை விமான நிலையத்திற்கு சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அதன்பேரில், பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில், காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் தகுந்த அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகர காவல், 5 கூடுதல் ஆணையாளர்கள், 8 சென்னை பெருநகர காவல் இணை ஆணையாளர்கள் மற்றும் காவல்துறை துணை தலைவர்கள், 29 காவல் துணை ஆணையாளர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள், சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உள்பட 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. பிற மாவட்ட காவல்துறையினரும் பாதுகாப்பு பணிக்காக சென்னை வந்துள்ளனர்.

பிரதமர் மோடி வருகை தரும் சென்னை விமான நிலையம், சென்னையில் செல்லும் வழித் தடங்கள், நிகழ்ச்சி நடைபெறும் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இது தவிர, சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144-ன் கீழ் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை (26.05.2022) வரை, டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial Vehicles) பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணமாக தற்காலிக தடை விதிக்கப்பட்ட டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி எங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட உள்ளது? என்பது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி பல்வேறு திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்க மற்றும் ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இன்று 26.05.2022 அன்று சென்னைக்கு வருகை தர உள்ளார். இதற்கான விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக வேப்பேரி ஈ.வே.ரா சாலை, பெரியமேடு, புரசைவாக்கம் தாசபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பொதுவாக அண்ணாசாலை, எஸ்வி பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும். ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறும் போக்குவரத்து காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடி ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.