சென்னை அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது காவல்துறையிடமிருந்து தப்பிய ரவுடி பினுவை தேடி ஈரோட்டில் உள்ள லாட்ஜ்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கத்தில் கடந்த 6-ம் தேதி இரவு ரவுடி பினுவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட 76 ரவுடிகளை போலீ ஸார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அப்போது ரவுடிகளின் தலைவன் பினு உள்ளிட்ட சுமார் 25 பேர் தப்பியோடிவிட்டனர். தப்பிய ரவுடி பினுவை தேடி ஈரோட்டில் உள்ள லாட்ஜ்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பல ரவுடிகள் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதால் அங்கும் தனிப்படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ரவுடிகள் அனைவரும் எத்தகைய செயலிலும் ஈடுபடக்கூடியவர்கள் என்பதால், தேவைப்படின் அவர்களை சுட்டுப்பிடிக்குமாறும் தனிப்படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பிறந்த நாள் கொண்டாட இடம் கொடுத்த லாரி செட் உரிமையாளர் வேலுவை தேடி திண்டிவனத்திலும் போலீசார் முகாமிட்டுள்ளனர். வேலு மீது திண்டிவனத்தில் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு, கொலை முயற்சி வழக்கு இருப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.