மழைத் தண்ணீர் சூழ்ந்ததால் மிகுந்த அவதியுற்று உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக தூக்கிச்சென்று மருத்துவமனைக்கு வேப்பேரி போலீசார் அனுப்பி வைத்தனர்.
சென்னை சூளை அஷ்டபுஜம் ரோடு அங்காளம்மன் கோயில் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் மழைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதில் சூளை, அஷ்டபுஜம் ரோடு, பிரதிக்ஷா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஹீராலால் என்பவரது 2 வயது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. மழை தண்ணீர் தேங்கி உள்ளதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இது தொடர்பாக வேப்பேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காவல் உதவி ஆய்வாளர் டேவிட் தலைமையிலான சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு காவல் குழுவினர் உடனடியாக அந்த வீட்டிற்கு சென்று குழந்தையும் அவரது தந்தையையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல், சூளை, அஷ்டபுஜம் சாலையில் வசிக்கும் 80 வயதான முதியவர் மணி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். தேங்கியிருந்த மழைத்தண்ணீரால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தது தொடர்பான தகவலறிந்து வேப்பேரி காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான குழுவினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கு 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், முதியவர் மணியை போலீசார் கட்டிலோடு தூக்கி சென்றனர். பிறகு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.