model image ai generated
தமிழ்நாடு

நாமக்கல் | பெற்ற தாயைச் சங்கிலியால் கட்டிப்போட்ட மகன்.. மீட்ட காவல்துறை!

நாமக்கல் மாவட்டத்தில், மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, பெற்ற தாயை சங்கிலியால் கட்டிவைத்த மகன் மூதாட்டியை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PT WEB

நாமக்கல் மாவட்டத்தில், மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, பெற்ற தாயை சங்கிலியால் கட்டிவைத்த மகன் மூதாட்டியை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே சவுதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி பழனியம்மாள் (80). இவர்களுக்கு தங்கவேல் மற்றும் சண்முகம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ரங்கசாமி பல வருடங்களுக்கு முன்னர் மனைவி பழனியம்மாளைப் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், மூத்த மகன் தங்கவேல் தாயார் பழனியம்மாளுடன் வசித்துவருகிறார். இளைய மகன் சண்முகம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கோவையில் குடும்பத்துடன் குடியேறி வசித்து வருகிறார். மூத்த மகன் தங்கவேலு வெப்படையில் வசித்து எலக்ட்ரிக் கடை நடத்திவரும் நிலையில் சகோதரர்களிடையே சொத்து பிரிப்பதில் தகராறு இருந்து வருகிறது.

model image

இந்நிலையில் பழனியம்மாளை மூத்த மகன் தங்கவேலு பராமரித்துவந்த நிலையில் அவருக்கு அடிக்கடி ஞாபகம் மறதி ஏற்பட்டு, அவ்வப்போது எங்கேனும் சென்று விடுவார் என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் எங்கேயும் சென்றுவிடக் கூடாது என்பதற்காக மூதாட்டி பழனியம்மாளை சவுதாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் உள்ள சிறிய இடத்தில் கனமான இரும்புச் சங்கிலி கொண்டு அவரை கட்டிவைத்தார். கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாகவே இதுபோல் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டுள்ள நிலையில், மூதாட்டி போதிய குடிநீர் உணவு இன்றி தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கோவையில் வசித்துவரும் இளைய மகன் சண்முகத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிய வரவே, அவர் சவுதாபுரம் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது தனது தாயார் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து வெப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து மூதாட்டியின் காலில் கட்டப்பட்டிருந்த சங்கிலியை அகற்றினர்.

model image

மேலும் இந்த விவகாரம் குறித்து பழனியம்மாளைப் பராமரித்து வந்த மூத்த மகன் தங்கவேலுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மூதாட்டியை தன்னுடன் கோவைக்கு அழைத்துச் செல்வதாக சண்முகம் கூறியதையடுத்து போலீசார் மூதாட்டி அவரிடம் செல்ல அனுமதித்தனர். சொத்துப் பிரச்னை காரணமாக மூத்த மகனே பெற்ற தாயை இரும்பு சங்கிலியால் கட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.