ed
ed twitter
தமிழ்நாடு

“மதுரை அலுவலகத்தில் சோதனை நடத்தியது சட்டவிரோதம்”.. தமிழக டிஜிபி அலுவலகத்தில் அமலாக்கத் துறை புகார்!

Prakash J

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் மொத்தம் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த டிச.1ஆம் தேதி கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, அங்கித் திவாரியின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் மடிக்கணினி மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அது தொடர்பாக அங்கித் திவாரிக்கு சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளவும் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் முதல்முறையாக மத்திய அரசு அலுவலகமான அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்குள் மாநில ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நுழைந்து சோதனை நடத்தியது நாடு முழுவதும் பேசுபொருளாகியது.

இதுதொடர்பாக பலரும் தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். நிலையில் சோதனை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அத்துமீறி சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒருவழக்கை முடிவு செய்யும் இடத்தில் அங்கித் திவாரி இல்லாத நிலையில், முழுவதுமாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனையிட்டு உள்ளனர் என்றும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு முக்கிய வழக்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் புலன் விசாரணை செய்து வரும் நிலையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை இட்டு இருப்பது முக்கிய ஆவணங்களில் இருக்கும் தகவல்களை எடுத்துச் செல்லும் சந்தேகம் இருப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது சீருடை இல்லை என்றும் காவலர்களுக்கான அடையாள அட்டையும் காண்பிக்கப்படவில்லை என்றும் திடீரென்று 35 பேர் மற்றும் ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு உள்ளே புகுந்து சோதனையிட்டு இருப்பதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.