திருவாரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 23,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் தெற்குவீதி நகர காவல் நிலையம் அருகே திருவாரூர் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு நாகபட்டினம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 10 மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத 23,000 ரூபாய் பணத்தை ஊழியர்களிடம் இருந்து அவர்கள் பறிமுதல் செய்தனர்.
பத்திரப் பதிவு செய்ய வருபவர்கள் பத்திரப்பதிவு தொகையை டிடி-யாகத்தான் கொடுக்க வேண்டும் என்ற விதியுள்ள நிலையில் திருவாரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரொக்கப்பணம் 23,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சார்பதிவாளர் பசுபதி உள்பட 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கூறியுள்ளனர். நேற்று மாலை 5 மணி அளவில் தொடங்கிய சோதனை இன்று அதிகாலை 4 மணி வரை நடைபெற்றது.