தமிழ்நாடு

காதல் ஜோடியை மிரட்டி ரூ.20ஆயிரம் பணம் பறிப்பு: காவலர்கள் அதிரடி பணியிடை நீக்கம்!

காதல் ஜோடியை மிரட்டி ரூ.20ஆயிரம் பணம் பறிப்பு: காவலர்கள் அதிரடி பணியிடை நீக்கம்!

webteam

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த காதல் ஜோடியிடம் பணம் பறித்த இரண்டு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு நாடு முழுவதில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை கடலூரைச் சேர்ந்த காதல் ஜோடி புதுச்சேரியைச் சுற்றிப் பார்ப்பதற்காக வந்துள்ளனர். அவர்கள் புதுச்சேரியில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, அன்று இரவு தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அன்று இரவுப்பணியில் இருந்த பெரியகடை காவல்நிலைய போலீசார் சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் காதல் ஜோடி தங்கி இருந்த விடுதிக்குச் சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது காதல் ஜோடி அறைக்குச் சென்ற காவலர்கள் அவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

மேலும், காதல் ஜோடியை மிரட்டி 20 ஆயி‌ரம் ரூபாய் பணத்தை‌ பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து‌ புதுச்சேரி காவல்துறை‌ தலைமையகத்திற்கு புகார் சென்றதை அடுத்து, உயர்மட்ட குழு விசாரணை நடத்தியது‌. அதில், பணம் பறிப்பு சம்பவ‌ம் உண்மை‌ என தெரி‌யவந்ததை அடுத்து, காவலர்கள் சதீஷ்குமார், சுரேஷ் ஆகியோர் பணியிடை‌ நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது‌ துறை‌ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.‌

இது போல பல காதல் ஜோடிகளிடம் போலீசார் பணம் பறித்திருக்கலாம் என்ற கோணத்திலும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரம் வீட்டிற்குத் தெரிந்துவிடும் என்பதால் பல காதல் ஜோடிகள் போலீசார் பணம் பறிப்பதை வெளியில் சொல்வதில்லை என்றும், இந்த காதல் ஜோடி தைரியமாக வெளியே கூறியதால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.