செய்தியாளர்:C. விஜயகுமார்
கடந்த ஜனவரி 1 ஆம் தேதி இரவு, மன்னார்குடியில் இருந்து சென்னை எக்மோர் செல்லும் மன்னை விரைவு ரயிலானது, திருவாரூர் ரயில் நிலையத்தில் நின்றது. அங்கு , ரயிலின் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் ரயில்வே காவலர் எனக் கூறிக்கொண்டு மூன்று நபர்கள் ஏறினர்.
அப்போது, கதவை திறக்கவில்லை எனக் கூறி ..ஒரு கால் முற்றிலும் அகற்றப்பட்ட மாற்றுத்திறனாளியை காவலர் ஒருவர் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட நபர், தான் தாக்கப்பட்ட வீடியோவை காட்டி ரயில்வே காவலர்களிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும், எவ்வித துரித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
பிறகு, மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்ற போது இரண்டாம் நிலை பெண் காவலர் பாதிக்கப்பட்டவரின் முகவரியை மட்டும் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்துள்ளார்.
தொடர்ந்து, காவலர் என கூறி ரயிலில் பயணித்த மாற்றுத்திறனாளி தாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, மாற்றுத்திறனாளியை தாக்கிய காவலர் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பழனி என்பது தெரியவந்துள்ளது. எனவே, திருவாரூர் ரயில்வே காவல்துறையினர் தாமாக முன்வந்து காவலர் பழனி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.