செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
தேனி அல்லிநகரம் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தவர் லீலாவதி (37). இவர், இன்று காலை அவரது வீட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அல்லிநகரம் போலீசார், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட லீலாவதியின் கணவர் சின்னச்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார் என்பதும், அதன்பின் லீலாவதி, தனது மகள் கௌசல்யாவை திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கௌசல்யா - பிச்சைமுத்து தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கணவரை பிரிந்த கௌசல்யா, தேனியில் உள்ள தனது தாயார் லீலாவதி வீட்டில் தங்கி ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே அடிக்கடி அல்லிநகரம் வரும் பிச்சைமுத்து, மனைவி கௌசல்யா மற்றும் மாமியார் லீலாவதியுடன் வாக்குவாதம் செய்து தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பிச்சைமுத்து லீலாவதியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.