தமிழ்நாடு

நெல்லை: அம்மன் கோயில்களில் தாலி, உண்டியல் பணம் திருட்டு - அடுத்தடுத்து 3 ஊர்களில் கைவரிசை

கலிலுல்லா

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே 3 ஊர்களில் உள்ள அம்மன் கோயில்களில் இன்று அதிகாலையில் கம்மல், தாலி மற்றும் உண்டியலில் பணம் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள வடலிவிளையில் பத்திரகாளி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இன்று காலையில் பூஜை வழிபாடு செய்ய கோயில் பூசாரி விஜயராஜ் சென்றுள்ளார். அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து அவர், ஊர்த்தலைவர் முத்துகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுகுறித்து பணகுடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரனை நடத்தினர். விசாரணையில் கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி, காதில் அணிந்திருந்த கம்மல் ஆகியவை திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.

மேலும் கோயில் முன்பு வைத்திருந்த உண்டியலையும் தூக்கி சென்றுள்ளனர். தூக்கி சென்ற உண்டியலை ஊருக்கு ஒதுக்குப்புறமுள்ள பகுதியில் வைத்து உடைத்து பணத்தை எடுத்த சென்றுள்ளனர். கொள்ளையன் உண்டியலை எடுத்து செல்லும் காட்சி அந்த தெருவில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதேபோன்று அருகிலுள்ள சுப்பிரமணியபுரம் மற்றும் கலந்தபனை அம்மன் கோயிலிலும் மர்மநபர்கள் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலியை திருடி சென்றுள்ளனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்த 3 ஊர்களில் குடியிருப்பு மத்தியில் உள்ள கோயில்களில் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளது பெரும்பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. கலந்தபனையில் மோட்டார் பைக்கில் வந்த 3 நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.