நெல்லை மாநகரில் ஸ்ட்ரோமிங் ஆப்ரேஷன் (Storming operation) என்ற பெயரில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் மற்றும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யும் நோக்கில் மாநகர காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று 30 இடங்களில் கொட்டும் மழையிலும் பிரதான சாலைகளில் வாகன சோதனை தொடங்கி பல்வேறு வகைகளில் சோதனையை போலீசார் நடத்தி வருகின்றனர்.
கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றசம்பவங்களில் ஈடுப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், நெல்லை மாநகர காவல் துறையினர் இரவு 9 மணி முதல் ஸ்ட்ரோமிங் ஆப்ரேஷன் (Storming operation) என்ற பெயரில் 30 இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் மாநகரின் பிரதான சாலைகள் சந்திப்புகள், மக்கள் கூடும் இடங்கள், அதிகமான வாகன நிறுத்துமிடங்கள், இவை எல்லாம் அடங்கும். வாகன பதிவு எண்களை சோதனை செய்து குற்றச் சம்பவங்களை தொடர்புடையதா என்ற விசாரணையும், மறுபுறம் குற்றச் சம்பவங்களில் தேடப்பட்டு வரும் நபர்கள் இரவு நேரத்தில் இடம்பெயர்கிறார்களா என்ற அடிப்படையில் சோதனையும் முழுமையாக நடைபெறுகிறது.
குறிப்பாக இரவு எட்டு மணியிலிருந்து மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதை பொருட்படுத்தாமல், கொட்டும் மழையிலும் சாலைகளில் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தி, கையில் டார்ச்லைட் வைத்துக்கொண்டு வாகனங்கள் நிறுத்தி ஆவணங்களை சோதனையிட்டு அனுப்புகின்றனர். அதே இடத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள் காவல்துறையினர் பறிமுதல் செய்து தனியாக விசாரணை நடத்துகிறார்கள். மழை பெய்யும் வேளையிலும் திடீரென நடக்கும் காவல்துறையின் வாகன சோதனையில் பொதுமக்கள் நின்று முழு ஒத்துழைப்பு அளித்து சென்றனர்.
இதுகுறித்து மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் கூறுகையில், ''இது காவல்துறையில் நடைபெறும் முக்கிய சோதனை. இடம்பெயரும் குற்றவாளிகளை கைது செய்யும் நோக்கிலும் இரவு நேரங்களில் குற்ற சம்பவத்தில் ஈடுபடுவதற்காக செயல்படும் நபர்களை தடுத்து, அவர்களை கைது செய்யும் அடிப்படையிலும் மாநகர காவல் துறையின் சார்பில் 30 இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்படுகிறது. சந்தேகத்திற்குரிய நபர்கள் இந்த சோதனையின்போது விசாரிக்கப்படுவார்கள். வாகன பதிவு எண்கள் முழு சோதனைக்கு உட்படுத்தப்படும். குற்றச் சம்பவங்கள் தடுப்பதே காவல் துறையின் நோக்கம். அதற்கு இந்த ஆப்ரேஷன் பெரிதும் உதவியாக இருக்கும்'' என தெரிவித்தார்.
- நாகராஜன்