தமிழ்நாடு

அண்ணா அறிவாலயத்தில் மரக்கிளை விழுந்து காவல் ஆய்வாளர் காயம் - போனில் ஆறுதல் கூறிய முதல்வர்

Veeramani

அண்ணா அறிவாலயத்தில் மரக்கிளை விழுந்து காயமடைந்த போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் தொலைபேசியில் பேசி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் அசோக் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அண்ணா அறிவாலய வளாகத்தில் மரக்கிளை நாகராஜன் மீது விழுந்தது, இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது, மேலும் 2 கார்களும் சேதமானது.

காயமடைந்த ஆய்வாளர் நாகராஜனுக்கு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் காரணமாக அவர் 10 நாட்கள் மருத்துவ விடுப்பில் உள்ளார்.

இது தொடர்பான தகவல் அறிந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று போனில் காவல் ஆய்வாளர் நாகராஜனை தொடர்பு கொண்டு காயம் குறித்து விசாரித்து ஆறுதல் கூறினார். மேலும், அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்குவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், விரைவில் நாகராஜன் பூரண குணமடைந்து பணிக்கு திரும்ப வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். பணியின்போது காயமடைந்த தன்னை முதல்வர் அவர்கள் மனிதாபமானத்துடன், அக்கறையாக விசாரித்து ஆறுதல் கூறியது தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் மிகுந்து மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இது தன் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என்றும் ஆய்வாளர் நாகராஜன் கூறியதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.