நாடாளுமன்றம்
நாடாளுமன்றம் pt web
தமிழ்நாடு

3 மாதம் முயற்சித்து வாங்கிய நுழைவுச் சீட்டு.. நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறியவர்கள் யார், யார்?

PT WEB

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நடந்து கொண்ட இரண்டு பேருக்கும் மைசூரு பாரதிய ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா நுழைவு அனுமதிச்சீட்டு வழங்கியுள்ளார். மக்களவையில் அத்துமீறிய மனோரஞ்சன், சாகர்ஷர்மா ஆகியோர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பார்க்க வேண்டும் என்று கூறி நுழைவு அனுமதிச்சீட்டு பெற்றுள்ளனர். மூன்று மாதங்களாக இந்த அனுமதிச் சீட்டுக்காக முயற்சி செய்துவந்த நிலையில், மொத்தம் மூன்று பேருக்கு நுழைவு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக எம்பி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதி மக்களுக்காக தாராளமாக நுழைவுச்சீட்டை வழங்குவது எம்.பியின் வழக்கம் என்கிறார்கள் அவரது உதவியாளர்கள்.

இவர்கள் தவிர நாடாளுமன்ற வளாகத்திற்குள் எதிர்ப்பை தெரிவித்த நீலம், அன்மோல் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர மேலும் 2 பேருக்கு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் ஒருவருக்கொருவர் பரிச்சயமானவர்கள் என்றும், குருகிராமில் வீடு எடுத்து தங்கியிருந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இவர்கள் சமூக வலைதளம் வழியே தொடர்பில் இருந்தவர்கள் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கிறார்கள். இவர்களிடம் இருந்து செல்போன்கள் எதுவும் இதுவரை பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்ப்பாளர்களில் ஒருவரான மனோரஞ்சனின் தந்தை தேவராஜே கவுடா, தனது மகன் மிகவும் நல்லவன் என்றும், நேர்மையானவன் என்றும் கூறியுள்ளார். சுவாமி விவேகானந்தரின் புத்தகங்களை படிப்பவர் என்றும், சமூகத்துக்கு நல்லது என்றால் எதையும் செய்யும் விருப்பம் கொண்டவர் என்றும் மனோரஞ்சனின் தந்தை கூறியுள்ளார். 2016 ல் பொறியியல் படித்த தனது மகன், விவசாயம் பார்த்துவந்ததாகவும், டெல்லி, பெங்களுருவில் சில நிறுவனங்களில் வேலை பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தைத் தொடர்ந்து சபாநாயகரிடம் எம்.பி. பிரதாப் சிம்ஹா நேரில் விளக்கம் அளித்துள்ளார். இச்சூழலில், மக்களவையில் நடந்த அத்துமீறல் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மறுபரிசீலனை செய்வது குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுத உள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விவாதிக்கக்கூடிய அனைத்துக்கட்சிக்கூட்டத்தில், நாடாளுமன்ற பாதுகாப்புக்குறைபாடுகள் குறித்து எம்பிக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ளனர்.