மதுரையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த காவலர் மீது மின்சார வாரிய ஊழியர்கள் தாக்குதல் நடத்தியச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆத்திக்குளம் கங்கைத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கனகசுந்தர். இவர் மதுரையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது அண்ணன் மற்றும் அண்ணியும் காவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இவர்கள் வசித்து வந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டதாகத் தெரிகிறது. வெகுநேரமாகியும் மின்சாரம் வராததால், மின்வாரியத்தைத் தொடர்பு கொண்ட சுந்தர் விவரத்தைக் கூறியுள்ளார்.
இதனையடுத்து மின் தடையை சரிசெய்ய ரவிக்குமார், காசி, ரஞ்சித்குமார், ரமேஷ் உள்ளிட்டோர் வந்துள்ளனர். அவர்கள் மது அருந்தியிருந்ததாகவும், பணிகளை தாமதப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த சுந்தர் அவர்களை தட்டிகேட்க, ஆத்திரமடைந்த மின்சார வாரிய ஊழியர்கள் காவலர் கனகசுந்தரையும் அவரது குடும்பத்தார் மீது தாக்குதல் நடத்தி தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து காவலர் கனகராஜ் தல்லாகுளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து, மின்சார வாரிய ஊழியர்களான ரவிக்குமார், காசி, ரஞ்சித்குமார், ரமேஷ் உள்ளிட்டோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இதில் ரமேஷ் மட்டுமே மின்சார வாரியத்தில் நிரந்தர பணியாளராக வேலை பார்த்து வரும் நிலையில், மற்ற மூவரும் ஒப்பந்த பணியாளர்களாக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் இரு தப்பினரிடைய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.