கடந்த மே 27 ஆம் தேதி அமலாக்கத்துறை போதைப்பொருள் தொடர்பான சோதனை மேற்கொண்டது சுமார் ரூ.258 கோடி போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜான் பிரிட்டோ என்ற நபர் மூளையாக செயல்பட்டதை அம்பலப்படுத்தியது. இந்த ஜான் பிரிட்டோ அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸின் சகோதரர் என சமூக வலைதளங்களில் பரவியது.இதுகுறித்து அமலாக்கத்துறை தரப்பில் கேட்கப்பட்ட போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினராக கூறப்படும் ஜான் பிரிட்டோ கேரளாவில் லாட்டரி விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ், அமைச்சர் ஆதார் அர்ஜுனாவின் மனைவி டைசி உள்ளிட்டவர்களும் இருப்பது தெரியவந்துள்ளது. அமைச்சர் ஆதவ் அர்ஜூன் உறவினர் ஜான் பிரிட்டோ போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோ என தவறாக சமூக வலைதளங்களில் பரவியதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ, இதனை உறுதி செய்யும் வகையில் தனக்கு எதிராக பொய்யான அவதூறுகள் சமூக வலைதளத்தில் பரப்பப்படுவதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், தலைமறைவாக உள்ள உண்மையாக போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோ யார் அவர் பின்னணி என்ற தகவலும் தற்போது முழுமையாக வெளியாகி உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி மதுரை இரயில் நிலையத்தில் பில்லோமென் பிரகாஷ் என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ. 150 கோடி ரூபாய் மதிப்புள்ள 37.5 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவும் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது மத்திய வருவாய் துறை புலனாய்வு பிரிவு (DRI) அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதேபோன்று கடந்த 2024 மார்ச் 5 அன்று, இந்திய கடலோர காவல்படையின் ரகசிய தகவலின்படி, மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் ஒரு மீன்பிடி படகை DRI அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில் இருந்து 108 கோடி ரூபாய் மதிப்புள்ள 99 கிலோ ஹாஷிஷ் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தலில் ஈடுபட்ட ரமிஷ், ஜான்சன், பிரதாப் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு(DRI) பதிவு செய்த 2 வழக்குகளையும் அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை சென்னை மற்றும் மதுரையில் கடந்த மே 27 ஆம் தேதி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் மூலம் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இந்த ஒட்டுமொத்த போதைப்பொருள் சிண்டிகேட்டிற்கும் முக்கிய மூளையாக செயல்பட்ட நபர் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவர் என அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர் மற்றும் இலங்கையில் வலுவான போதைப்பொருள் தொடர்புகளைக் கொண்டவர் என தெரியவந்துள்ளத
குறிப்பாக போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோ கடலோர பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காக, ஜான் பிரிட்டோ உள்ளூர் மீனவர்களையும் படகு உரிமையாளர்களையும் தன் வசப்படுத்தியுள்ளார். இந்திய கடல் எல்லை வழியாக போதைப்பொருட்களைக் கொண்டு சென்று, ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைப்பதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார். கைதான பில்லோமென் பிரகாஷ் மற்றும் மீனவர்கள் அனைவரும் ஜான் பிரிட்டோவின் நேரடி உத்தரவின் பேரிலேயே செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹவாலா பணப்பரிமாற்றம் தீவிர விசாரணை தற்போது நடத்தப்பட்ட சோதனைகளில், இந்த கடத்தல் நெட்வொர்க்கின் சர்வதேச தொடர்புகளை உறுதிப்படுத்தும் பல முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மேலும், இந்த கடத்தலில் ஈடுபடும் தரகர்கள் மற்றும் கடத்தல்காரர்களுக்கு பணம் கைமாறுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஹவாலா பணப்பரிமாற்ற வழிகள் குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குறிப்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை கொடுங்கையூரில் திருவள்ளுவர் நகரில் இருக்கும் ஜான் பிரிட்டோவின் வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். அங்கு குடும்பத்தோடு அவர் தலைமறைவாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது தாத்தா மட்டும் வசித்து வருவதாகவும் கூறியுள்ளனர். ஜான் பிரிட்டோபின் தந்தை இருதயராஜ் மத்திய உளவுத்துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
ஜான் பிரிட்டோ சர்வதேச பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை படித்தது தெரியவந்துள்ளது. படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, தடம் மாறி போன காரணத்தினால் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இலங்கைக்குச் சென்று போதைப்பொருள் தொழில் ஈடுபட்டு தற்போது சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனாக உருவெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் பல்வேறு பொருள் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். குறிப்பாக இந்தியா இலங்கை வழியாக கடல் மார்க்கமாகவே போதைப் பொருள் கடத்துவதில் ஜான் பிரிட்டோ ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச பாஸ்போர்ட் எடுத்து வைத்துக்கொண்டு தனது போதைப்பொருள் நெட்வொர்க்கை வெவ்வேறு நாடுகளில் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் துறைமுகங்களின் வழியாக குறிப்பாக தமிழகத் துறைமுகங்களில் இருந்து போதை பொருளை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பல்வேறு வகையில் கடத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோவின் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவின் போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் அமலாக்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை, சர்வதேச போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோவை தேடி வருகின்றனர்