தமிழ்நாடு

சென்னைக்கு நடைபயணமாக சென்ற நரிக்குறவர் மக்கள்.. பசியை போக்கி உதவிய போலீசார்..!

சென்னைக்கு நடைபயணமாக சென்ற நரிக்குறவர் மக்கள்.. பசியை போக்கி உதவிய போலீசார்..!

webteam

போதிய உணவு கூட இல்லாத நிலையில் குழந்தைகளை காண நடந்தே சென்னை சென்ற நரிகுறவர்களை தடுத்து உணவளித்து லாரியில் கொள்ளிடம் காவல்துறையினர் பாதுகாப்புடன் அனுப்பிவைத்தனர்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையை பூர்வீகமாக கொண்ட நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் பிழைப்பு தேடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் பாசி மணி, ஊசி மணி, தேன் போன்ற பொருட்களை வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்த நரிகுறவர்கள் குழு ஊரடங்கு உத்தரவால் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிந்து விடும் ஊருக்கு சென்று விடலாம் என காத்திருந்தவர்களுக்கு மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கையில் பணம் இல்லாமல் வயிற்றுப்பசி ஒருபுறமிருந்தாலும் சென்னையில் இருக்கும் தங்களது பிள்ளைகளை காண வேண்டும் என்ற உந்துதலில் நேற்றுமுன்தினம் காலை தொடங்கி திருவாரூரிலிருந்து நடைபயணமாக சென்னையை நோக்கி நடந்தனர். இரவு நாகை மாவட்ட எல்லையான கொள்ளிடத்திற்கு வந்தடைந்த அவர்களை கொள்ளிடம் போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களின் நிலையை கேட்டறிந்து மனிதாபிமான அடிப்படையில் பசியால் தவித்த அந்த குழுவினருக்கு பிஸ்கட், பால் மற்றும் குடிநீர் வழங்கி போலீசார் உபசரித்தனர்.

பின்னர் அவ்வழியாக சென்னை சென்ற லாரியில் நரிக்குறவர் இன மக்களை ஏற்றி மாவட்ட எல்லையை கடந்து சென்னை செல்வதற்கு உதவினர். போலீசாரின் இந்த மனிதாபிமான செயலை கண்ட அக்குழுவினர் கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.