தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு ரயில் மூலம் கடத்தப்படவிருந்த 1,200 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயிலில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, இன்று காலை போலீசார் அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வரும் வழியில் தக்கோலம் என்னும் இடத்தில் இருந்து மின்சார ரயில் பெட்டிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பயணிகளின் இருக்கைகளுக்கு கீழ் இருந்து 30 சிறிய மூட்டைகளில் கேட்பாரற்று கிடந்த 1,200 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் வருவதை கண்டதும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''ஆந்திரா மாநிலங்களில் உள்ள தனியார் அரிசி மில் முதலாளிகள் ரூ 15.20 கொடுத்து இந்த அரிசியை வாங்குகின்றனர். இதற்கென மொத்த விலை ஏஜெண்டுக்கள் இருக்கிறார்கள். ஒரு கிலோவிற்கு 3 ரூபாயிலிருந்து 5 ரூபாய் வரை கமிஷன் கொடுத்து அரிசி வாங்கப்படுகிறது. இவ்வாறு கடத்தப்படும் ரேஷன் அரிசியை இருசக்கர வாகனம், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் கடத்துகின்றனர். தற்போது மின்சார ரயிலில் அதிக அளவு கடத்த தொடங்கியுள்ளனர்.
இந்த கடத்தலுக்கு ஒருசில ரேஷன் கடைக்காரர்களே துணைபோகிறார்கள். கடத்தப்படும் இந்த அரிசியை ஆந்திர மில் உரிமையாளர்கள் அதை பாலிஸ் செய்து சில்லரை வியாபாரத்திற்கு அனுப்புகிறார்கள்'' என்று போலீசார் கூறினர்.