தமிழ்நாடு

துணி கடை ஊழியரால் 21 பேருக்கு கொரோனா - கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

துணி கடை ஊழியரால் 21 பேருக்கு கொரோனா - கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

webteam

கோவையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த நிலையில், சீல் வைத்த கடையை திறந்து வியாபாரம் செய்த கடை உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் கணேஷ் என்பவருக்கு சொந்தமாக துணிக்கடை இயங்கி வருகிறது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள கொரோனோ ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் கடையில் வியாபாரம் செய்வதாக கூறி கடந்த 24-ஆம் தேதி தாசில்தார் கடைக்கு சீல் வைத்தார். 

இந்த நிலையில் கடையின் உரிமையாளர் கணேஷ் கடையின் பூட்டை திறந்து தொடர்ந்து வியாபாரம் செய்து வந்ததாக மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், சீல் வைக்கப்பட்ட கடையை திறந்து வியாபாரம் செய்யப்படுவதை உறுதி செய்தனர். 

மேலும் ஏற்கெனவே அந்த கடையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில், அதன் மூலம் அப்பகுதியில் 21 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று கண்டறியப்பட்டது. இதுகுறித்து கோவை கிழக்கு மண்டல மாநகராட்சி ஆணையாளர் செல்வம் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துடன் அப்பகுதியே தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் செல்வம் புகாரின் பேரில் பீளமேடு போலீசார் துணி கடை உரிமையாளர் கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.