தமிழ்நாடு

மீனாட்சி கோயிலில் சாமி தரிசனம் செய்த பெற்றோர்; தொலைந்த 6 வயது குழந்தை - போலீசார் அதிரடி

சங்கீதா

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழி தவறி சென்ற குழந்தையை, துரிதமாக செயல்பட்டு காவல்துறையினர் இரண்டு மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று நடைபெறும் மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவ விழாவிற்கு சென்னையில் இருந்து தேனி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர், தங்களது ஆறு வயது குழந்தையுடன், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றுள்ளனர்.

அப்போது தம்பதியினர் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாரதவிதமாக அவர்களது ஆறு வயது குழந்தை வழி மாறி கோயிலுக்கு வெளியில் சென்றுவிட்டார். உடனடியாக கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம், பெற்றோர் அளித்த தகவலையடுத்து, ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான காவல்துறையினர் குழந்தையை தேடத் தொடங்கினர்.

இரண்டு மணி நேர தேடுதலுக்கு பின், ஜான்சிராணி பூங்கா அருகே நின்றுகொண்டிருந்த குழந்தையை மீட்டு அவர்களது பெற்றோரிடம், காவல்துறையினர் ஒப்படைத்தனர். பெற்றோர் அளித்த புகாரின் கீழ் துரிதமாக செயல்பட்டு, 2 மணி நேரத்தில் குழந்தையை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினருக்கு, பெற்றோர் கண்ணீர் மல்க தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர். இதனையடுத்து கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், தங்களது குழந்தைகளை கவனத்துடன் கண்காணிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.