தமிழ்நாடு

ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச் சூடு - அமமுக, போலீசார் இடையே மோதல்

ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச் சூடு - அமமுக, போலீசார் இடையே மோதல்

webteam

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் சோதனை செய்ய முயன்ற போது தடுக்கப்பட்டதால், காவல்துறை திடீரென 4 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுகவின் சார்பில் ஜெயக்குமார், திமுக சார்பில் மகாராஜன் மற்றும் அதிமுக சார்பில் லோகிராஜன் போட்டியிடுகின்றனர். இதேபோன்று தேனி மக்களவைத் தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் (அமமுக), ஈவிகேஸ் இளங்கோவன் (காங்கிரஸ்), ரவீந்திரநாத் (அதிமுக) ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் ஆண்டிபட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் பணப்பட்டுவாடா நடத்தப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து பணப்பட்டுவாடா நடக்கிறதா என சோதனை செய்ய காவல்துறையினர் அங்கு சென்றனர். அப்போது காவலர்களை அமமுகவினர் தடுத்ததால், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. 

இதையடுத்து காவல்துறையினரை அமமுகவினர் தாக்க முயன்றதாகவும், அதனால் தற்காப்பிற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தேனி மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். ஆனால் 4 முறையும் வானத்தை நோக்கி சுடப்பட்டதால், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால், அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்த முயன்ற அமமுகவினர் சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றதால், அவர்களை காவல்துறையினர் தேடிச்சென்றுள்ளனர்.