தமிழ்நாடு

முதலமைச்சரின் கையைத் துண்டிக்கப்போவதாக பேசிய விவகாரம்: வி.பி. கலைராஜன் மீது வழக்குப்பதிவு

முதலமைச்சரின் கையைத் துண்டிக்கப்போவதாக பேசிய விவகாரம்: வி.பி. கலைராஜன் மீது வழக்குப்பதிவு

webteam

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையைத் துண்டிப்பதாகப் பேசிய விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன் மீது வழக்குத் தொடரப்பட்டது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகியும், வழக்கறிஞருமான செல்லப்பாண்டியன் முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கலைராஜன் பேசியதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி புகார் மனு அளித்திருந்தார். அவர் தனது மனுவில், சென்னையில் பேட்டியளித்த கலைராஜன், முதலமைச்சரின் கையைத் துண்டிக்கப்போவதாக அச்சுறுத்தும் வகையில் பேசியதாகவும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதுதொடர்பாக வி.பி.கலைராஜன் பேசிய போயஸ் கார்டன் பகுதி தேனாம்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் அந்த காவல்நிலையத்துக்கு புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் கொலைமிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வி.பி.கலைராஜன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக புதியதலைமுறையிடம் பேசிய வி.பி.கலைராஜன், முதலமைச்சர் குறித்து பேசியது தவறு என்று ஒப்புக்கொண்ட பிறகும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தம் மீது அரசியல் பழி வாங்கும் நோக்கிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கலைராஜன் தெரிவித்தார்.