திருநெல்வேலி மாவட்டத்தில், 11-ம் வகுப்பு மாணவன் ஒருவரால் 16 வயது சிறுவன் மீது அரிவாள் தாக்குதல் நடந்தது. வாக்குவாதம் முற்றியதால் கோபத்தில் நடந்த இந்த சம்பவம், அம்பாசமுத்திரம் காவல்துறையினரால் விசாரணை செய்யப்படுகிறது. காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவாமல் இருக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோவில் அருகே உள்ள நாச்சியார் கிணறு பகுதியில் சுமார் ஐந்து சிறுவர்கள் ஒன்றாகச் சேர்ந்து சுற்றியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபமடைந்த சிறுவன் ஒருவர் தன்னிடம் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மற்றொரு சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் 16 வயது சிறுவனுக்கு கழுத்து, கை, கால், தொடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அம்பாசமுத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காவல் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில், அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்தில் சிறுவர்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் சில செய்திகள் பரவி வரும் நிலையில், தவறான தகவல்கள் பரவாமல் இருக்க கீழ்க்கண்ட விளக்கம் தெரிவிக்கப்படுகிறது.
11.03.2026 அன்று, 16 வயது மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் இடையே ஏற்பட்ட சாதாரண வாய் தகராறு தொடர்ச்சியாக, 16 வயது சிறுவன் தனது நண்பரான 15 வயது சிறுவனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நல்ல உடல் நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பாசமுத்திரம் காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து, குற்றச்செயலில் தொடர்புடைய இளஞ்சிறாரை கையகப்படுத்தினர். மேலும், அவரை இளஞ்சிறார் நீதிமன்ற குழுமத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதற்கட்ட விசாரணையில், காயமடைந்த சிறுவனும் தாக்கிய சிறுவனும் நண்பர்கள் என்பதும், அவர்களுக்கிடையே ஏற்பட்ட சாதாரண வாய் தகராறின் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது