அரியலூர் மாவட்டம் தத்தனூரில் நடைபெற்ற காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 228 மையங்களில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. 3 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் பெரும்பாலானோர் தேர்வெழுதினர். சென்னையில் மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், தேர்வு மையத்தில் ஆய்வு நடத்தினார். இதேபோன்று பிற மாவட்டங்களிலும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
எழுத்துத் தேர்வில் வெற்றிபெறும் நபர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் 80 மதிப்பெண்களும், உடல்தகுதித் தேர்வில் 15 மதிப்பெண்களும் வழங்கப்படும். கூடுதலாக என்.சி.சி, விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ்கள் அடிப்படையில் 5 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தேர்ச்சி பெறுபவர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஏற்றவாறு, வகுப்புவாரியாக 1:5 விகிதாசாரப்படி அடுத்தக்கட்டமாக உடல்தகுதி தேர்வுக்கு அனுப்பப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரம் 2 மாதங்களில் ஆன்லைனில் வெளியிடப்படும்.
இதனிடையே, அரியலூர் மாவட்டம் தத்தனூரில் நடைபெற்ற காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தத்தனூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவப் பிரகாஷ் என்பவருக்குப் பதிலாக ரகுபதி என்பவர் தேர்வெழுதி உள்ளார். இதனையடுத்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட புகாரில் தேவப் பிரகாஷ், அவரது அண்ணன் சந்தோஷ் மற்றும் ரகுபதி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.