கூவத்தூரில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களிடம் வடக்கு மண்டல ஐஜி செந்தாமரைக் கண்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் புகார் அளித்தார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கூவத்தூர் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களிடம் வடக்கு மண்டல ஐஜி செந்தாமரைக் கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தரசி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறையினருடன் அதிமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.