தமிழ்நாடு

போராட்டக்காரர்களை ஒடுக்க முள்வேலி தடுப்புகள் - விமர்சனங்களால் அகற்றிய கோவை காவல்துறை

போராட்டக்காரர்களை ஒடுக்க முள்வேலி தடுப்புகள் - விமர்சனங்களால் அகற்றிய கோவை காவல்துறை

EllusamyKarthik

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டக்காரர்களை ஒடுக்கும் வகையில் வைக்கப்பட்டு இருந்த முள்கம்பி தடுப்புகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்ததை அடுத்து, காவல் துறையினர் அகற்றினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல் கட்சியினர் முற்றுகை போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். ஆட்சியர் அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய விடாமல் தடுக்கும் வகையில் முள்கம்பி தடுப்புகளை பந்தயசாலை காவல் துறையினர்  15 தினங்களுக்கு முன்னர் வைத்தனர் .

இந்நிலையில் நேற்றைய தினம் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை கண்டித்து,  காலை பல்வேறு தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் முள்கம்பி தடுப்புகள் வைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து விதிமுறைகளுக்கு மாறாக முள்கம்பி தடுப்புகள் வைக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது.

இதையடுத்து இன்று மாலை காவல் துறையினர் அவசர அவசரமாக முள்கம்பி தடுப்புகளை அகற்றினர். கோவை காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், “முள்கம்பி ஆலோசனை சொன்ன 'அதிகாரிமீது' நடவடிக்கை இல்லையேல் கோவை நகர காவல்துறையின் ஆணைகளை மதிக்கக்கூடாது! 

இது சட்டத்தின் ஆட்சியா? மறியலைத் 'தடுக்க' முள்கம்பி சட்டத்தில் இருக்கிறதா? சட்டத்திற்கு அப்பாற்பட்ட எதுவும் கூலிப்படையின் வேலையே; அடியாட்படையின் அட்டூழியமே.” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.