துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு குப்பையில் வீசப்பட்ட, சந்தியாவின் கொலை வழக்கில் போலீசார் மெத்தனம் காட்டுவதாக அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த ஜனவரி 21-ம் தேதி ஒரு பெண்ணின் இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து சென்னை பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 15 நாட்கள் கழித்து அந்த உடல்கள் கன்னியாகுமரி பூதப்பாண்டி, ஞானம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியாவின் உடல் பாகங்கள்தான் எனத் தெரியவந்தது.
இதனையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக சந்தியாவை அவரது கணவரான துாத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற சினிமா டைரக்டர் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சென்னை ஜாபர்கான் பேட்டையில் கொலை நடந்த வீட்டில் வைத்து பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால், கொலை செய்தேன் எனப் பாலகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர் சொன்ன தகவலின் பேரில் சென்னை ஜாபர்கான்பேட்டை அடையாற்றில் வீசப்பட்ட சந்தியான உடலின் மற்றொரு பாகமான இடுப்பிற்குக்கீழ் உள்ள பாகத்தை போலீசார் கண்டெடுத்தனர். ஆனால் சந்தியாவின் தலை மற்றும் மற்றொரு கை இன்னும் கிடைக்கவில்லை. அவற்றை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சந்தியா கொலை வழக்கில் போலீசார் மெத்தனம் காட்டுவதாக சந்தியாவின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். சந்தியாவின் உடல் பாகங்கள் முழுமையாக கிடைக்காத நிலையில் உடலின் முக்கிய உறுப்புகளை எடுத்து விற்கும் கும்பலுடன் பாலகிருஷ்ணனுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் சந்தியாவின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். அத்துடன் சந்தியாவின் குழந்தைகளை பாலகிருஷ்ணன் குடும்பத்தில் இருந்து மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.