தமிழ்நாடு

காலையில் வலிப்பு.. ஆனாலும் மாலையில் பணி.. மயங்கி விழுந்து காவலர் உயிரிழப்பு

Rasus

சேலம் ரயில் நிலையத்தில் வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை வாகன பிரிவு ஓட்டுனர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஆயுதப்படையில் வாகன பிரிவு தலைமை ஓட்டுனராக சுந்தர் (46) என்ற காவலர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சேலம் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலமாக வெளி மாநில தொழிலாளர்கள் உத்தரபிரதேசத்திற்கு நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுந்தர் மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள், காவலர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மத்தியில் சோகத்தினை ஏற்படுத்தியது.

மேலும் காலையில் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் மீண்டும் மாலை பணிக்கு வந்தபோது இரவு மீண்டும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.