விஜய், வேல்முருகன் Pt web
தமிழ்நாடு

தவெக மேடையில் முருகர் பாடல்.. நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் மீது புகார்!

தவெக நிகழ்ச்சியில், முருகன் பக்திப் பாடலை இழிவுபடுத்தும் நோக்கில் நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் பாடியிருப்பதாக கூறி, திருநெல்வேலி மாநகர காவல் நிலையத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

Premkumar S

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சி நேற்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அவ்விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜய், கொடியேற்றிவைத்து கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, இந்நிகழ்வில் அவர், திமுகவை கடுமையாக விமர்சித்தும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தவெகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் உரையாற்றினார்.

வேல்முருகன்

முன்னதாக, இவ்விழாவில் நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன் கலந்துகொண்டு தவெகவினரை மகிழ்விக்கும் வகையில் பாடல்களைப் பாடினர். தொடர்ந்து, விஜய்க்கு முருகர் படங்களை வேல்முருகன் பரிசளித்தார். அப்போது, வேல்முருகனுடன் விஜய் நடனமாடியிருந்தது தவெக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், விழா நடக்கும் அரங்கில் இருந்து வெளியே வந்த வேல்முருகன் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”கச்சேரிக்காக மட்டுமே நான் இங்கு வந்துள்ளேன். மேடையில் இருப்பவர்களை பாடல் பாடி மகிழ்விப்பதுதான் எனது வேலை” எனவும் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், தவெக நிகழ்ச்சியில் தமிழ்க் கடவுள் முருகனுடன் விஜயை ஒப்பிட்டு பாடல் பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் டவுன் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் குற்றாலநாதன் என்பவர் திருநெல்வேலி மாநகர காவல் துறைக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், நேற்று நடந்த தவெகவின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வின்போது, முருகர் பக்தர்களை அவமதிக்கும் வகையில் முருகர் பாடலை இழிவுபடுத்தி பாடியுள்ளனர். முருக பக்தர்கள் நெஞ்சுருகி பக்தியோடு பாடுகின்ற, ’மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலை, அப்படியே பாடி ’வருவாய் குகனே வேலையா’ என்று பாடுவதற்கு பதில் "பனியது, மழையது, நதியது, கடலது சகலமும் உனதொரு கருணையில் எழுவது வருவாய் எங்கள் தளபதியே வருவாய் வெற்றிக் கழகமே" என பாடப்பட்டிருக்கிறது.

வேல்முருகன்

முருகனின் பக்திப் பாடலை இழிவுபடுத்தும் கெட்ட எண்ணத்திலும், மத மோதலை ஏற்படுத்தும் நோக்கத்திலும் தவெக தலைவர் விஜய், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூன் ஆகியோர் தூண்டுதலினால் வேல்முருகன் என்பவர் முருகனின் பக்திப் பாடலை மாற்றிப் பாடியுள்ளார். இது எனது மத உணர்வை புண்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த எனது நண்பர்கள் சிலரும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, பாடகர் வேல்முருகன் மீதும் அதற்குக் காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்து புகாரளிக்கப்பட்டிருக்கிறது. நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன் மீது புகாரளிக்கப்பட்டிருக்கும் இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.