தமிழ்நாடு

காவல் ஆணையர் ஜார்ஜ் நீதிமன்றத்தில் ஆஜர்

காவல் ஆணையர் ஜார்ஜ் நீதிமன்றத்தில் ஆஜர்

webteam

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்கக் கோரிய வழக்கில் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சென்னை காவல்நிலையத்தில் நிலுவை வழக்குகளின் நிலை குறித்து 2016 டிசம்பர் 6ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய காலம் தாமதமான நிலையில், கடந்த 17ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் தெிரிவிக்கப்பட்டது. ஆனால், மார்ச் 20ம் தேதி விசாரணையின் போது அறிக்கை தாக்கல் செய்யப்படாதது தெரியவந்தது.

இதையடுத்து, வரும் 27ம் தேதி காவல் ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தவறினால் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரித்தார். ஆனால், வரும் 27ம் தேதி ஆணையர் ஜார்ஜ் வெளியூர் செல்வதால், இன்றைய தினம் அவர் ஆஜராக‌ அனுமதிக்க வேண்டும் என அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை இன்று விசாரித்த போது ஆஜரான ஜார்ஜ், நிலுவை வழக்குகள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். வழக்குகளை விரைந்து முடிக்க ஆணையர் நடவடிக்கை எடுத்து வருவதால், அடுத்த விசாரணையின் போது ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம் கோரிக்கை விடுத்தார்.

நிலுவை வழக்குள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக தவறான தகவல் அளிக்கப்பட்டதற்காகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி, நிலுவை வழக்குகள் குறித்த அடுத்தகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி விசாரணையை செப்டெம்பர் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அப்போது காவல் ஆணையர் ஆஜராகத் தேவையில்லை என்றும் நீதிபதி விலக்களித்தார்.