தமிழகத்தில் தடை உத்தரவை மீறிய 4100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று உலகம் முழுவதும் 22 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதாவது 24,065 பேர் இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். உலகளவில் 199 நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 5,31,609ஆக உயர்ந்துள்ளது. உலகம் உழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,23,391 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தை பொருத்தவரை ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் சமூக விலகலை கடைபிடிக்குமாறு மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் சிலர் 144 தடை உத்தரவை மதிக்காமல் வீதிகளில் சுற்றித்திரிகின்றனர். இதனால் போலீசாரிடம் சிக்கி சிலர் அடி வாங்குவதையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி வாகங்களில் பயணம் செய்தோர், வெளியே சுற்றியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் 4100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையை பொருத்தவரை 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 இருச்சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து போலீசார் 291 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பல்வேறு கட்ட எச்சரிக்கைகளை போலீசார் விடுத்தும் 144 தடை உத்தரவை மீறியதால் சட்டரீதியாக நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் 144 தடை உத்தரவை கண்காணிக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.