தமிழ்நாடு

தொற்றுநோய் பரப்பும் சட்டத்தில் 250 பாஜகவினர் மீது வழக்கு

webteam

"கறுப்பர் கூட்டம்" யூடியூப் சேனலை தடை செய்யக்கோரி எழும்பூர் நீதிமன்ற வாசலில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மீது தொற்றுநோய் பரப்பும் சட்டம் உள்பட 3 பிரிவின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

"கறுப்பர் கூட்டம்" யூடியூப் சேனலை தடை செய்யகோரியும், கைதான சுரேந்திரனை கண்டித்தும் எழும்பூர் நீதிமன்ற வாசலில் பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கைதான சுரேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வருவதை அறிந்த பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுரேந்திரனை எழும்பூர் மாஜிஸ்திரேட் வீடான ராயபுரத்திற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. 144 தடை உத்தரவும் அமலில் இருக்கிறது. இந்த தடை உத்தரவை மீறி பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் எழும்பூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன் உள்பட 250 பேர்  மீது சட்டவிரோதமாக கூடுதல்,  உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை அநேகமாக பரப்பக்கூடிய கவனக்குறைவான செயலில் ஈடுபடுதல், உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை அநேகமாக பரப்பக்கூடிய தீய எண்ணத்திலான செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.