நெல்லையில் 13 வயது சிறுவன் மர்ம மரணம் meta ai
தமிழ்நாடு

நெல்லை| 13வயது மாணவன் மர்ம மரணம்.. 25 நாள் போராட்டம்; உறவினர்கள் அனுமதியின்றி உடலை எரித்த காவல்துறை!

நெல்லையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராட்டம் நடத்திய நிலையில், காவல்துறையினரே உடலை எரித்தது கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

PT WEB

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த மாறாந்தை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். 13 வயதான இவரின் மகன் திருநெவேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி விடுதியிலேயே தங்கிப் படித்து வந்த மாணவன் கடந்த 25 நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பதால், தனது துணிகளைத் துவைத்து உலர்த்துவதற்காக விடுதி வளாகம் அருகில் உள்ள கிணற்றுப் பகுதிக்குச் சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை எனக் கூறப்படுகிறது.

மூழ்கிய சிறுவன்

இந்நிலையில் பள்ளியின் தரப்பில் இருந்து பெற்றோரைத் தொடர்புகொண்டு மாணவன் துணி துவைக்கச் சென்றபோது விடுதி வளாகத்தில் இருந்த கிணற்றுக்குள் விழுந்து இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது?

80 அடி ஆழம் கொண்ட அக்கிணறு இரும்புக் கம்பி வேலியால் மூடப்பட்டிருந்துள்ளது. ஆனால் கிணற்றின் மேல் இருந்த சிமெண்ட் ஸ்லாப்புகளும் மிகவும் பழமையானதாகவும் சேதமடைந்த நிலையிலும் இருந்துள்ளது. துணிகளை உலர்த்தச் சென்ற மாணவன், எதிர்பாராத விதமாக அந்தச் சேதமடைந்த சிமெண்ட் ஸ்லாப்புகள் வழியாகக் கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

மாணவன் கிணற்றில் மூழ்கியதை அறிந்ததும், உடனடியாக ராதாபுரம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தியணைப்பு வீரர்களின் உதவியுடன் மாணவனின் சடலம் கயிறு கட்டி மீட்கப்பட்டுள்ளது. ராதாபுரம் காவல்துறையினரிடம் மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விடுதி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நடந்ததாக பெற்றோர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், 25 நாட்களாக தங்கள் மகனின் இறப்பிற்கு நீதி கேட்டு மாணவனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Death

25 நாட்களாகியும் மாணவனின் உடலை உறவினர்கள் வாங்காததால் நெல்லை சிந்துபந்துறை மின் மயானத்தில் வைத்து காவல்துறையினரே இறந்த சிறுவனது உடலை எரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த உறவினர்கள் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாநகர உதவி காவல் ஆணையரிடம் எங்கள் வழக்கப்படி உடலை புதைக்க வேண்டும், ஆனால் நீங்கள் எரித்து விட்டீர்களே என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.