தமிழ்நாடு

"காவல்துறையின் மிருகத்தனம் கொடூரமான குற்றம்" - ராகுல் காந்தி ட்வீட் !

"காவல்துறையின் மிருகத்தனம் கொடூரமான குற்றம்" - ராகுல் காந்தி ட்வீட் !

jagadeesh

காவல் துறையின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கூறி ட்விட்டரில் #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட இரு காவல் ஆய்வாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதி மன்றம் இந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும் எனக் கூறியது.

இந்த உயிரிழப்புச் சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் விசாரணைக் கைதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கூறி #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் " காவல்துறையின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம். நம் பாதுகாவலர்களே அடக்குமுறையாளர்களாக மாறுவது ஒரு பெரும் சோகம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஜெயராஜ் & ஃபென்னீஸ் மரணத்திற்கு நீதி கிடைக்க அரசிடம் கோருகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.