பல்லடம் மூவர் படுகொலை வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி பழங்குடியின மக்கள் மிரட்டப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் சேமலைக்கவுண்டம்பாளையத்தில் கடந்தாண்டு நவம்பரில், 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில், பழவஞ்சிபாளையம் குறவர் காலனியில் வசித்து வரும் 15க்கும் மேற்பட்ட பழங்குடியினரை பிடித்து சென்று, குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு காவல் துறையினர் அடித்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, ஹரிதாஸ் என்பவரை அடித்து துன்புறுத்தியதாகவும், என்கவுன்டர் செய்துவிடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அப்பகுதியினர் தங்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டுமென கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள திருப்பூர் மாவட்ட காவல் துறை, சந்தேகப்படியான நபர்களிடம் சட்டப்படியும், எவ்வித துன்புறுத்தலும் இல்லாமலும் விசாரணை நடத்தப்படுவதாக கூறியுள்ளது.
ஹரிதாஸ் மற்றும் குமரன் ஆகியோர், விசாரணையை தவிர்க்கவும், வழக்கை திசை திருப்பவும், உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்புவதாக தெரிவித்துள்ளது. காவல் துறையின் மீது சுமத்தப்படும் புகார்கள் ஆதாரமற்ற பொய் புகார்கள் எனவும், திருப்பூர் மாவட்ட காவல் துறை விளக்கமளித்துள்ளது.