குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்களின் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையில் லேசான தடியடி நடத்தினர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் அரக்கோணம் நகர் முழுவதும் உள்ள 29 கிலோமீட்டர் தொலைவில் சாலைகள் குண்டும் குழியுமாக சேதம் அடைந்து உள்ளது. சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி வருகின்றனர்.
பல போராட்டங்களை நடத்தியும் நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அத்துடன், மழைக்காலம் தொடங்கிய நிலையில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் செல்வதற்கு மிகுந்த சிரமப்படுவதாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு மனுக்கள் மூலமாகவும், போராட்டங்கள் மூலமாகவும் புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, மாணவர்களின் பெற்றோர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரக்கோணம் திருத்தணி செல்லும் சாலையில் ஜோதி நகர் பகுதியில் உள்ள இந்திரா காந்தி சிலை முன்பு பள்ளி பேருந்துகளையும் அரசு பேருந்துகளையும் வழி மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது வாக்குவாதம் முற்றியதால் நகர காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். இது குறித்து நகராட்சி நிர்வாகம் தொடர்பு கொண்டபோது உரிய பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.