தமிழ்நாடு

கட்டபொம்மன் பிறந்தநாள்: அனுமதியை மீறி போராட்டம்; போலீசார் தடியடியால் பரபரப்பு

webteam

கரூரில் போலீசாரின் தடியடிக்குப் பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக இளைஞர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கரூரில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். பல இடங்களில் அவரது திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்தும் சுக்காலியூர் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கரூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு அவர்களது பாரம்பரிய கலையான உறுமி மேளம், ஒயிலாட்டம் ஆடினர். தொடர்ந்து அவர்கள் இருசக்கர வாகனத்தில் வலம் வந்தனர். கரூர் பேருந்து நிலையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் அவர்கள் வந்த போது அங்கு திரண்டு இருந்த போலீசார் இருசக்கர வாகனத்தில் பேரணியாக செல்ல அனுமதி இல்லை என்ற அவர்களை தடுத்தனர். அப்பொழுது போலீசாருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இளைஞர்கள் வந்த இரு சக்கர வாகனங்களின் சாவிகளை போலீசார் எடுத்தனர். அப்பொழுது போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, நிலைமையை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைந்து செல்ல செய்தனர். போலீசாரின் தடியடியில் இளைஞர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. மற்றொரு இளைஞருக்கு காயம் ஏற்பட்டது. பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. கரூர் பேருந்து நிலையம் அருகில் போலீசாரின் இந்த தடியடி சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாரின் தடியடியால் சிதறி ஓடிய இளைஞர்கள் சுக்காலியூர் பகுதியில் திரண்டனர். ஏற்கெனவே அங்கிருந்த 500 க்கும் அதிகமான இளைஞர்களுடன் உறுமி மேள தாளத்துடன் ஒயிலாட்டம் ஆடியவாறு சென்று சுக்காலியூர் பகுதியில் இருந்த வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.