கைதுசெய்யப்பட்டவர்கள் - விஜி, சித்துராஜ்
கைதுசெய்யப்பட்டவர்கள் - விஜி, சித்துராஜ் K.THANGARAJU
தமிழ்நாடு

மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களால் வி.ஏ.ஓ-க்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம்: இருவர் கைது!

PT WEB

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலம் ஒன்றியத்தில் மானத்தாள் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக வினோத்குமார் என்பவர் கடந்த ஒன்றரை வருடமாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அந்த ஊராட்சியில் அதிகமாக கிராவல் மண் எடுக்கப்பட்டுவருவதாக புகார் வந்ததையடுத்து, கடந்த 18-ஆம் தேதியன்று வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார் வி.ஏ.ஓ வினோத்குமார்.

அப்போது ஒரு டிராக்டரை நிறுத்தி அவர் விசாரணையில் ஈடுப்பட்டபோது, சித்துராஜ் என்பவர் உரிய அனுமதி இல்லாமல் தனியார் நிலத்திலிருந்து கிராவல் மண் கடத்தியது அவருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து சித்துராஜ் மற்றும் அவரது டிராக்டர் ஓட்டுனர் விஜி இருவர் மீதும் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், மண் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர் மற்றும் ஜேசிபி வாகனத்தை பறிமுதல் செய்து சேலம் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

டிராக்டர், ஜேசிபி

இந்நிலையில் கடந்த 28-ம் தேதியன்று கிராம நிர்வாக அலுவலர், அலுவலகத்திற்கு வினோத்குமார் சென்றுகொண்டிருந்த போது, அவரை வழிமறித்து தாக்கிய சித்துராஜ், செல்போனை பறித்துக்கொண்டதுடன், கத்தி - அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விட்டுள்ளார். அதனையடுத்து சித்துராஜ் மீது தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், ஐந்து பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சித்துராஜ் தலைமறைவான நிலையில், தாரமங்கலம் காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் தலைமையில் தனிப்படை அமைத்த போலீசார், அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

தொளசம்பட்டி காவல்நிலையம்

இந்த நிலையில், கோயம்புத்தூரில் பதுங்கியிருந்த சித்துராஜை, தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து ஓமலூர் காவல் நிலையத்தில் அவரை ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

மேலும், மண் கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுனர் விஜியை நேற்றே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வி.ஏ.ஓவை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளி சித்துராஜை கைது செய்த தனிப்படைக்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.