தமிழ்நாடு

மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் கைது

மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் கைது

webteam

கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவியைக் கடத்தி சென்று விடியவிடிய வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது இரண்டாவது மகள் தக்கலை அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கடந்த 23-ம் தேதி தேர்வு முடித்து வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றுள்ளனர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மாணவியின் தந்தைக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து மாணவியின் தந்தை தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய டி.எஸ்.பி.கார்த்திகேயன் அவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசார், பள்ளி மாணவியைக் கடத்தி சென்றது மாணவியின் பக்கத்து வீட்டில் இருக்கும் நிதின் என்பது தெரியவந்தது. மேலும் நிதினுடன் இருந்தது அவரது நண்பர் சாலமன் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சாலமனின் செல்போன் சிக்னல் மூலம் அவர்கள் வல்லநாடு பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து நேற்றிரவு வல்லநாடு விரைந்த தனிப்படை போலீசார் கட்டுமானத் தொழிலாளிகளான நிதின்(19) மற்றும் சாலமன்(18) ஆகிய இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர். பின்னர் இவர்கள் கடத்திச் சென்ற அந்தப் பள்ளி மாணவியை மீட்டு குழித்துறை அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின் மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் தன்னை நிதின் மற்றும் சாலமன் வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து இழுத்து கடத்தி சென்றதாகவும் பின்னர் சாலமனின் உறவினருக்கு சொந்தமான தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டிலுள்ள ஒரு வீட்டில் தனி அறையில் தன்னை அடைத்து வைத்து தாக்கி விடிய விடிய இருவரும் வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் இருவரும் மாறிமாறி வல்லுறவில் ஈடுபடும்போது தன்னை ஆபாச படம் எடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்தப் பள்ளி மாணவியை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்த போலீசார் காட்டுமான தொழிலாளிகளான நிதின் மற்றும் சாலமன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் கடத்தலுக்கு தனது வீட்டை கொடுத்து இச்சம்பவத்திற்கு துணை போன சாலமனின் உறவினரை போலீசார் தேடி வருகின்றனர். பள்ளி மாணவியைக் கடத்தி வாலிபர்கள் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.