நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப்போல் ரவுடி ஒருவர் தான் செய்த கொலையைப் பற்றி தற்பெருமை பேசியதால் காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டார்.
ரவுடி சுந்தர்ராஜன் என்பவரை அடிதடி வழக்கில் கோவை சரவணம்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவலர்கள் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது அரிவாள், பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தனது நண்பரின் பிறந்தநாளை சுந்தர்ராஜன் கொண்டாடிய புகைப்படங்களை சிலர் சமூக வலைதளத்தில் பரப்பினர். அதனைக் கண்ட காவல்துறையினர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக சுந்தர்ராஜன் மீது மற்றுமொரு வழக்கைப்பதிவு செய்தனர். எப்படியாவது அடிதடி வழக்கில் இருந்து தப்பிவிடலாம் என சுந்தர்ராஜன் எண்ணிக்கொண்டிருந்த போது இந்த வழக்கு அதற்கு தடையாக வந்து நின்றது.
மேலும் சுந்தர்ராஜனுடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவரது கூட்டாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அனைவரும் காவல் நிலையத்தில் உள்ள லாக் அப்பில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது தனது கூட்டாளிகளிடம் சுந்தர்ராஜன் பேசிய பேச்சுத்தான் அவர் கொலை செய்ததை அம்பலப்படுத்திவிட்டது.
அப்படி சுந்தர்ராஜன் என்ன பேசினார் தெரியுமா? "நானெல்லாம் கொலையே பண்ணிட்டு தப்பிச்சுட்டேன், ஆனா இந்த கேக் வெட்டுற போட்டோவால மாட்டிக்கிட்டேன்" என தனது புகழை தானே பாடியுள்ளார். இந்த சேதி காவல்துறையினரின் காதை எட்ட கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கினர். அதன் விளைவாக மாரிமுத்து என்பவரை சுந்தர்ராஜன் கொலை செய்தது தெரியவந்தது.
கோவை கந்தேகவுண்டன்பாடியைச் சேர்ந்த மாரிமுத்து, ரவுடி சுந்தர்ராஜனின் நண்பர். இவர் மீது இரிடியம் மோசடி, திருட்டு உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாரிமுத்து காணாமல் போனார். அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். ஆனால் மாரிமுத்து மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த ரகசியம் சுந்தர்ராஜன் மற்றும் அவரது நண்பர் முத்துவேலின் மனதுக்குள் புதைந்து கிடந்தது. ஆம் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் மாரிமுத்து கொல்லப்பட்டார்.
அவரை கொலை செய்த சுந்தர்ராஜனும் அவரது நண்பர் முத்துவேலும் உடலை புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல் இருந்துள்ளனர். சுந்தர்ராஜனின் தற்பெருமை பேச்சு மாரிமுத்துவின் உடலை வெளிக்கொண்டு வந்துள்ளது. தோண்டி எடுக்கப்பட்ட மாரிமுத்துவின் உடல் கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. நாங்கெல்லாம் யார் தெரியுமா? என வசனம் பேசிய சுந்தர்ராஜனும் அவரது நண்பர் முத்துவேலும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்