வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி பகுதியைச் சார்ந்தவர் திருமலை-உமா தம்பதியினர். திருமலை ஆட்டோ ஓட்டுநராகவும் அவரது மனைவி உமா தனியார் வங்கி ஒன்றில் துப்புரவாளர் பணியாளராகவும் வேலை செய்து வருகின்றனர். மேலும் உமாவின் அண்ணன் மகன் மாதேஷ் என்பவர் அதே பகுதியில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். மாதேஷின் தாய் தந்தையர் இருவரும் காலமான நிலையில் இவர், அத்தை உமாவின் பராமரிப்பிலேயே வசித்து வருகிறார்.
இந்தச் சூழலில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் உமாவின் தாயார் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். உமாவின் தாயார் மின்சாரம் தாக்கி இறந்த காரணத்தால் இன்சூரன்ஸ் பணம் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இன்சூரன்ஸ் பணத்தில் தனக்கும் பங்கு கொடுக்க சொல்லி மாதேஷ் தனது அத்தை உமாவை தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மாதேஷ் தனது பராமரிப்பிலிருந்து வரும் காரணத்தால் உமா பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாதேஷ் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து உமாவின் பின்பக்க கழுத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த இவரது அத்தை உமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக்கண்ட மாதேஷ் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பணிக்கு சென்று வீடு திருப்பிய ஆட்டோ ஓட்டுநர் திருமலை தனது மனைவி உமா இரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததார். திருமலை பின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறை, தப்பி ஓடிய மாதேஷையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் தந்தை இல்லாமல் வாழும் மாதேஷை அடைக்கலம் கொடுத்து வந்த தனது அத்தையே அவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.