சென்னையில் 108 அவசர கால மருத்துவசேவை பிரிவில் பணியாற்றிய போலி பெண் மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் அவசர கால மருத்துவ உதவிகள் மற்றும் சிகிச்சை சேவைகளை ஜி.வி.கே என்கிற நிறுவனம் வழங்கி வருகிறது. இதன் தலைமை அலுவலகம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ளது.
108 மருத்துவ சேவை நிறுவனத்தின் னிதவள மேலாளர் அசோக்குமார் கடந்த 12ம்தேதி சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் எங்களுடைய நிறுவனத்தில் மொத்தம் 16 மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் மருத்துவ சான்றிதழ்களை ஆய்வு செய்தோம். அதில் வேலூரைச் சேர்ந்த ரேச்சல் ஜெனிபர் கொடுத்த மருத்துவ சான்றிதழ் போலியானவை என தெரியவந்துள்ளது. போலியான மருத்துவ ஆவணங்களை கொடுத்து மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
புகார் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் தேடுவதை தெரிந்துகொண்ட ஜெனிபர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து தேனாம்பேட்டை அருகே உள்ள ஒரு வீட்டில் ஜெனிபர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
ஜெனிபர் மீது மோசடி, ஆள்மாறாட்டம் செய்தல், போலி ஆவணம் தயாரித்தல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.