ஐபோன் எனக்கூறி துணி துவைக்கும் சோப்புத் துண்டை விற்று வங்கி மேலாளரை ஏமாற்றிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பொதுத்துறை வங்கி ஒன்றில் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரது அலுவலகத்திற்கு சென்ற இருவர், தங்களிடம் விலை உயர்ந்த ஐபோன் இருப்பதாகவும், அதனை வெறும் 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் கூறி ஆசை காட்டியுள்ளனர். தங்களிடம் இருந்த செல்ஃபோனை வைத்து ரமேஷுக்கு செயல் விளக்கம் காட்டிய அவர்கள் ரமேஷை நம்ப வைத்துள்ளனர். ஆரம்பத்தில் யோசித்த ரமேஷ், முன்னணி நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் அந்த ஐபோனை வாங்க சம்மதம் தெரிவித்தார்.
பணத்தை வாங்கிக் கொண்ட நபர்கள் சீலிடப்பட்ட பெட்டி ஒன்றை கொடுத்துவிட்டு அதில் ஐபோன் இருப்பதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்து பெட்டியை திறந்து பார்த்த ரமேஷ், அதில் துணி துவைக்கும் சோப்புத்துண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.