தமிழ்நாடு

ஏடிஎம்-ல் பணத்தை தவறவிட்ட நபர்! முறையாக ஒப்படைத்த கூலித்தொழிலாளிகளுக்கு குவியும் பாராட்டு

ஏடிஎம்-ல் பணத்தை தவறவிட்ட நபர்! முறையாக ஒப்படைத்த கூலித்தொழிலாளிகளுக்கு குவியும் பாராட்டு

நிவேதா ஜெகராஜா

மதுரையில் வங்கி ஏடிஎம்மில் பெட்ரோல் பங்க் மேலாளரொருவர் தவறவிட்ட 40 ஆயிரம் ரூபாய் பணத்தை நேர்மையோடு ஒப்படைத்த இளைஞர்களுக்கு காவல்துறையினர் நேரில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மதுரை தெப்பக்குளம் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் அப்பகுதியில் பெட்டோல் நிலைய மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் காமராஜர் சாலை பகுதியில் இருந்த இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில், சரவணன் 40 ஆயிரம் ரூபாய் பணத்தினை டெபாசிட் செய்துள்ளார். டெபாசிட் செய்து விட்டு சரவணன் அவசர அவசரமாக பணிக்கு கிளம்பிச்சென்றுள்ளார். இந்நிலையில், டெபாசிட் இயந்திரத்தில் பணம் உள்ளே செல்லாமல் வெளியே வந்துள்ளது. ஆனால் அதை அறியும் முன்னரே, சரவணன் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

வெகுநேரமாகியும் பணம் தனக்கு கிரெடிட் ஆகாததால், சந்தேகமடைந்துள்ளார். இதற்கிடையில், அவருக்கு பின்பு பணத்தை செலுத்த காத்திருந்த மதுரை தமிழன் தெரு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான (சுமை தூக்கும் பணி செய்பவர்கள்) முத்துராஜ், சதீஷ் ஆகியோர் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தை பார்த்துள்ளனர்.

அதை உடனடியாக எடுத்துக்கொண்டு, தெப்பக்குளம் காவல்நிலையத்திற்கு சென்ற அவர்கள், அந்த 40 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல்துறையினரிடம் கொடுத்துவிட்டு நடந்தவற்றை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி பணத்தை தவறவிட்ட சரவணனை அழைத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை அவரிடம் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

மேலும் பெட்ரோல் நிலைய மேலாளர் தவறவிட்ட பணத்தை நேர்மையாக எடுத்து அதனை காவல்நிலையத்தில் பொறுப்போடு ஒப்படைத்த இளைஞர்களுக்கு காவல்துறையினர் தங்கள் பாராட்டுதல்களை தெரிவித்தனர். மேலும் தெப்பக்குளம் காவல் நிலைய சரக துணை ஆணையர் முத்துராஜ், தொழிலாளர்கள் முத்துராஜ், சதீஷை பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

செய்தியாளர்: மணிகண்டபிரபு