தமிழ்நாடு

காவல்துறையினர் அர்ச்சகர்களுக்கிடையே வாக்குவாதம் - 20 நிமிடம் நிறுத்தப்பட்ட ‘அத்தி வரதர்’ தரிசனம்

webteam

காஞ்சிபுரத்தில் அத்திவரதருக்கு பூஜை செய்ய வரும் அர்ச்சகர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் தரிசனம் 20 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது.

அத்திவரதர் வைபவம் தொடங்கியது முதல், கோயிலில் பணிபுரியும் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் மற்ற துறை ஊழியர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த அட்டையைக் காண்பித்தால்தான் அவர்களும் விஐபி தரிசனம் செய்யும் வழியில் சென்று கோயில் பணிக்கு செல்ல முடியும். 

இந்நிலையில், இன்று காலை அத்திவரதருக்கு பூஜை செய்ய பணிக்குச் சென்ற அர்ச்சகர்களை அரை மணி நேரத்துக்கு மேலாக காக்க வைத்த காவல்துறையினர் அவர்களை, பொது தரிசன வரிசையில் வரும்படி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த அர்ச்சகர்கள் அனைவரும் ஒன்றுக் கூடி அத்திவரதருக்கு பூஜை செய்வதை நிறுத்திவிட்டு காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால், சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் அத்திவரதர் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுபோல இனி நடக்காது என காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த் துறையினரும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அர்ச்சகர்கள் பணிக்குச் சென்றனர்.