தமிழ்நாடு

கவிதை பாடும் காவலர் ! குவியும் பாராட்டு!

கவிதை பாடும் காவலர் ! குவியும் பாராட்டு!

webteam

சென்னை நகரில் இரவுப் பணியின் போது காவலர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வாக்கி டாக்கியில் கவிதை வாசித்து அசத்திய உயர்நீதிமன்ற காவல் ஆய்வாளர் கணேசனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

நவம்பர் 24ஆம் தேதி சென்னையில் காவல்துறையினர் வழக்கம்போல் இரவு நேர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவுப் பணியில் இருப்பவர்கள் எங்கு செல்ல வேண்டும், எங்கெங்கே என்னென்ன நடக்கிறது போன்ற தகவல்கள் அவ்வப்போது வாக்கி டாக்கி மூலம் தெரிவிக்கப்படும். அதே போல் அன்றும் தகவல்கள் பறிமாறப்பட்டன. இப்படி தகவல் பரிமாற்றத்திற்கிடையே  தீந்தமிழ் கவிதை ஒன்று வாக்கி டாக்கி வழியே வந்தது.

இரவுப் பணியில் இருந்தவர்களுக்கு ஆச்சர்யம். காவலர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வாக்கி டாக்கியில் கவிதை படிப்பது யார் என விசாரித்தனர். சென்னை உயர்நீதிமன்ற காவல் ஆய்வாளர் கணேசன்தான் கவிதை படித்தவர் என்பது பின்னர் தெரியவந்தது. சிறு வயது முதலே தமிழ் மீது ஆர்வம் கொண்ட கணேசன் காவல் பணிக்கிடையே கவியும் பாடி மற்றவர்களையும் ஊக்கப்படுத்துகிறார். காவல்துறையினர் பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார். 

இந்நிலையில் கவி பாடி ஊக்கப்படுத்திய ஆய்வாளர் கணேசனை துணை ஆணையர் ஜெயலட்சுமி பாராட்டி உள்ளார். 
காவலர்களை ஊக்கப்படுத்தி, அவர்கள் சிறப்பாக பணிபுரிய உதவும் ஆய்வாளர் கணேசனுக்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ்கள் குவிகின்றன.