பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையே நீண்ட நாட்களாக கருத்துவேறுபாடு நிலவி வந்த சூழலில், எதிர்பாராத திருப்பமாக இருவரும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். தைலாபுரம் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்த நிலையில், கடந்த 3 நாட்களாக பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் முகாமிட்டுள்ளார். உடல் பரிசோதனைக்காக அவர் வந்துள்ளார் எனக் கூறப்பட்டாலும், ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோருடன் ராமதாசின் சந்திப்பும் நடந்தது.
இந்த சூழலில், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது மகள் கவிதா வீட்டிற்கு ராமதாஸ் வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமகவிற்குள் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் எனக் கூறினார். அத்துடன், தொண்டர்கள் அனைவரும் தன் பக்கம் நிற்பதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.
இதற்கிடையில், ராமதாசை, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி சந்தித்து பேசினார். நீண்ட நேரம் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமகவினுள் எழுந்துள்ள மோதல் தொடர்பாக சுமூகமான நல்ல தீர்வு கிடைக்கும் என்றும், விரைவில் நல்ல செய்தியை ராமதாஸ் கூறுவார் என தெரிவித்துள்ளார்.
2026 தேர்தல் வரவிருக்கும் சூழலில், பாமகவிற்குள் நிலவும் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படும் சூழலில், கூட்டணி அமைப்பது, தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு ராமதாஸ், அன்புமணி இடையே நடக்கவிருக்கும் சந்திப்பே இதற்கு தீர்வை கொடுக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.