சாலைமறியல் போராட்டம் pt desk
தமிழ்நாடு

வாணியம்பாடி: தமிழக முதல்வரை கண்டித்து, டயரை எரித்து சாலை மறியல் போராட்ட - பாமகவினர் 13 பேர் கைது

வாணியம்பாடியில் தமிழக முதல்வரை கண்டித்து டயரை எரித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

நேற்று முன்தினம் அதானி விவகாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸின் அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் முக.ஸ்டாலின், ‘அவருக்கு வேறு வேலை இல்லை’ என பதிலளித்திருந்தார். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே நேற்று தமிழக முதல்வரை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சாலைமறியல் போராட்டம்

அப்பொழுது திடீரென டயரை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. உடனடியாக, டயரை தண்ணீர் ஊற்றி அணைத்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுப்பட்ட 50க்கும் மேற்பட்ட பாமகவினரை கைது செய்தனர்.

இதையடுத்து திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், நகர செயலாளர் அன்பரசு, முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாலு, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.