பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் பாமகவின் மாம்பழம் சின்னம் இடம்பெற்றது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அன்புமணி, ராமதாஸின் கண்டனத்திற்கு பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இப்பொதுக்கூட்டத்தில் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ள அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதனையொட்டி, அப்பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையில், அதிமுக -பாஜக கட்சியின் சின்னங்கள் உட்பட பாமகவின் மாம்பழம் சின்னமும் இடம்பெற்றிருக்கிறது.
பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணமாக ராமதாஸ் தரப்பு மற்றும் அன்புமணி தரப்பு என பாமக இரு தரப்புகளாக செயல்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் அன்புமணி தரப்பு பாமக அதிமுக கூட்டணியில் சேர்ந்தது. இதனையொட்டி, இன்று மோடி கலந்துகொள்ளும் பொதுகூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கிறார். எனவே, பாமகவின் மாம்பழம் சின்னம் பொதுக்கூட்ட பேனர்களில் இடம்பெற்றிருக்கிறது. ஏற்கனவே, பாமக எங்களிடம் தான் இருக்கிறது என ஒவ்வொரு தரப்பும் மாறி மாறி கூறிவரும் வேலையில், அன்புமணி கூட்டணி அமைத்துள்ள என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் மாம்பழம் சின்னம் இடம்பெற்றிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
மாம்பழம் சின்னம் பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் ராமதாஸ், பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது. அனுமதி பெறாத மாம்பழம் சின்னத்தை எப்படி பயன்படுத்துவீர்கள். மேடையின் பின்னணியில் மாம்பழம் சின்னம் பயன்படுத்தப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத சின்னத்தை பொதுக்கூட்ட மேடையில் காட்சிப்படுத்துவது சட்டவிரோதம் . பிரதமர் பதவிக்கு இது அவமரியாதை என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அன்புமணியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், தேர்தல் ஆணையம் எங்களையே அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருக்கிறது, எனவே இந்தக் கேள்வியை தேர்தல் ஆணையத்திடம் தான் கேட்க வேண்டும் என பதிலளித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக மக்கள் திமுக ஆட்சி வேண்டாம் என முடிவெடுத்துவிட்டார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகள் பிரிந்து இருந்ததால் தான் கடந்த முறை திமுக வெற்றி பெற்றது. இந்த முறை நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். 2 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனத் தெரிவித்தார்.